உமரிக்காடு என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா??
சங்ககாலத்தில் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்கள் பண்டைய நாளில் உமரிச்செடி என்னும் ஒரு வகைச் செடியை பகைவர்கள் வராத வண்ணம் அரணாக வைத்து வளர்த்துள்ளனர். அந்த உமரி செடி ஊர் முழுவதும் நிறைந்திருந்ததால் உமரிக்காடு என பெயர் ஏற்பட்டது.

சங்க காலத்தில் தமிழ்நாடு சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என மூன்று பகுதிகளாக பிரிந்து காணப்பட்டது. மேற்குக் கடற்கரைப்பகுதியை சேர நாடு என்றும், கிழக்குக் கடற்கரையின் வடபகுதியை சோழ நாடு என்றும், அதன் தென் பகுதி பாண்டிய நாடு என்றும் வழங்கப்பட்டன. அவற்றை முறையே சேர, சோழ, பாண்டிய அரச வம்சத்தினர் ஆண்டு வந்தனர்.
கொற்கையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த பாண்டிய அரசனின் மூன்று மகன்கள் மூவிடங்களுக்கும் சென்று சேர, சோழ, பாண்டிய அரசுகளை நிறுவினர் என்ற செய்தியும் நிலவுகின்றது.
சங்ககால இலக்கியத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட அரசர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால் அவர்களுடைய அரசியல் ஆட்சி வரலாற்றைத் தொடர்ச்சியாக அறிவதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கப்பெறவில்லை.
சங்க கால மன்னர்களை நாம் பெரும் மன்னர்கள், குறுநில மன்னர்கள் என்று இரண்டாக பிரித்துக் காணலாம். பெரும் மன்னர்கள் என்போர் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் ஆவர். குறுநில மன்னர்கள் என்போர் வேளிர், கோசர் போன்ற சிற்றரசர்கள் ஆவர்.
