close
சமுதாய செய்திகள்

மறைக்கப்பட்டதா மாவீரர் அனந்த பத்மநாப நாடாரின் வீரமும் வரலாறும்?

Veera Thalapathy Anantha Padmanabhan Nadar
வீரத்தளபதி அனந்த பத்மநாபன் நாடார்

மாவீரன் அனந்த பத்மநாபன் நாடார் களரி, வர்மக்கலை, அடிமுறை போன்ற போர்க்கலைகளில் மிகப்பெரும் வல்லவராவார். இவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குளச்சல் போரின் போது டச்சு இராணுவத்திற்கு எதிராக போராடிய ஒரு துணிச்சலான போர்ப்படை தளபதி ஆவார்.

பிறப்பு மற்றும் தோற்றம்

னந்தபத்மநாபன் கொல்லம் ஆண்டு சிங்கம் 24, 873 (கி.பி. 1698) அன்று கண்ணனூர் தச்சன்விளையில் 64 அறைகள் கொண்ட வீட்டில் தனுமலைய பெருமாள் ஆசான் மற்றும் லெக்ஷ்மி தேவி ஆகியோருக்கு பிறந்தார். இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலின் வேர்கிளம்பிக்கு அருகில் உள்ள தச்சன்விளை என்ற ஊரில் பிறந்தார். இது கல்குளம் வட்டத்தின் தற்போதைய வெய்யனூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம் மற்றும் குடும்ப வரலாறு

இவரது தந்தை இவருக்கு இட்ட பெயர் அனந்தப் பெருமாள் ஆனால் இவரது தாய்மாமன் மற்றும் உறவினர்கள் பத்மநாபன் என்ற செல்லப்பெயரோடும் மற்றவர்கள் அவரை பாபு அரசன் அல்லது இள வீர ராஜன் என்றும் அழைத்தனர். பின்னர் மன்னர் மார்த்தாண்ட வர்மா அனந்தனையும் பத்மநாபனையும் இணைத்து அவரை அனந்தபத்மநாபன் என்று அழைத்தார். இவருக்கு பொன்னம் பெருமாள் மற்றும் மாயகொண்டப் பெருமாள் என்ற இரண்டு சகோதரர்களும், தங்கப்பழம் மற்றும் சரஸ்வதி தேவி என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

தாணுமலையப் பெருமாள், திருப்பப்பூர் அரச குடும்பத்தின் வழித்தோன்றல் ஆவார். இந்த குடும்பத்தின் வரலாற்று சுவடு ஆய் ராஜ்ஜியம் எனும் பிற்கால சேர ராஜ்ஜியத்தில் இருந்தும் தொடங்குகிறது. தாணுமலையப் பெருமாளுக்கென்று நூற்றுக்கும் மேற்பட்ட அடிமைகள் இருந்தனர். மன்னர் ராமவர்மாவின் முதன்மைத் தளபதியாக இருந்தவர் தாணுமலையப் பெருமாள். அவர் ஆயுதங்கள் தயாரிக்கும் பொறுப்பில் இருந்தார். மேலும், அவர் வேநாட்டின் ஆயுதக் கிடங்கின் பொறுப்பாளராக இருந்தார். மேலும், களரி எனப்படும் 108 தற்காப்புக் கலை பயிற்சி மையங்களின் தலைவராகவும் இருந்தார்.

டச்சு படைகளின் தாக்குதல்கள்

அன்றைய காலக்கட்டத்தில் டச்சு கிழக்கிந்திய நிறுவனம் இப்பகுதியில் வர்த்தக நிலையத்தை நிறுவி, கடற்கொள்ளை, கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது. அங்கு மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் ஆளப்பட்ட திருவிதாங்கூர் இராஜ்ஜியம் உட்பட உள்ளூர் ராஜ்ஜியங்களின் மீது கட்டுப்பாட்டைப் பெறவும் அவர்கள் முயன்றனர்.

1741 ஆண்டில், அட்மிரல் யூஸ்டாசியஸ் டி லானாய் தலைமையிலான டச்சு இராணுவம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மீது படையெடுத்தது. அப்போது மன்னர் மார்த்தாண்ட வர்மா தனது படையை ஒருங்கிணைத்து டச்சுக்காரர்களுக்கு எதிராக போரிட்டார், ஆனால் அவர்களை முழுமையாக தோற்கடிக்க முடியவில்லை. டச்சு இராணுவம் ராஜ்யத்தை தொடர்ந்து அச்சுறுத்தியது, அவர்களை தோற்கடிக்க ஒரு புதிய உத்திகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை மன்னர் உணர்ந்தார்.

மன்னர் மார்த்தாண்ட வர்மா, தனது துணிச்சலுக்கும் போர்த்திறமைக்கும் பெயர் பெற்ற வீரத் தளபதி அனந்த பத்மநாபன் நாடாரின் உதவியை நாடினார். ராஜா வீரத் தளபதி அனந்த பத்மநாபன் நாடார் திருவிதாங்கூர் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் டச்சுக்காரர்களை தோற்கடிக்கும் பணிகளை தலைமையேற்று மேற்கொண்டார்.

அனந்தபத்மநாப நாடாரின் போர் வியூகம்

போர்ப்படைத் தளபதி அனந்த பத்மநாபன் நாடார் தலைமையிலான இராணுவம் டச்சு படைகளிற்கு எதிராக தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டது. டச்சு இராணுவத்தை தோற்கடிக்க அவர்கள் கொரில்லா போர், சாமர்த்தியமான திட்டமிடல் மற்றும் ஆச்சர்ய திடீர் தாக்குதல்களை கையாண்டனர். ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தில், வீரத் தளபதி அனந்த பத்மநாபன் நாடாரின் படை டச்சு இராணுவத்தின் சப்ளை லைன்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தினர், இதனை எதிகொள்வதற்கான முன்னேற்பாடுகள் இல்லாமல் டச்சு படை சிதறுண்டது.

இறுதியாக, 1741 இல் குளச்சல் போரில், தளபதி அனந்த பத்மநாபன் நாடார் மற்றும் அவரது இராணுவம் அட்மிரல் டி லனாய் தலைமையிலான டச்சு இராணுவத்தை எதிர்கொண்டது. கடுமையான போரின் இறுதியில் வீரத்தளபதி அனந்த பத்மநாபன் நாடாரின் தலைமையிலான படைகள் பல உயிரிழப்புகளுக்கு நடுவே வெற்றி பெற்றது. மேலும் அவர்கள் அட்மிரல் டி லானோய் உட்பட பல டச்சு அதிகாரிகளை உயிருடன் சிறைபிடித்தனர். இப்போரில் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த 108 நாடார் ஆசான்களின் துணைக் கொண்டு அனந்த பத்மநாப நாடார் தலைமையிலான ராணுவம் டச்சுப் படையினரை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனந்த பத்மநாபன் நாடாரின் திறமையான போர் உத்திகள் மற்றும் தலைமைத்துவம் ஆகியவை டச்சுக்காரர்களை தோற்கடித்து பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

நவீன ஆயுதங்கள்

வெள்ளையரின் அதிநவீன ஆயுதம் ஏந்திய போர்க்கப்பல்கள் மற்றும் துப்பாக்கி, பீரங்கி போன்ற நவீன ஆயுதத்திற்கு முன்னாள் வேல்கம்பு, வாள் மட்டுமே ஆயுதமாக வைத்திருக்கும் ஒருவருக்கு எதிர்த்து மோதுவதற்கு திறமையும் துணிச்சலும் வேண்டும். அது 17ஆம் நூற்றாண்டிலேயே முதன்முதலில் மாவீரர் அனந்த பத்மநாப நாடாருக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குளச்சல் வீரன் பட்டம்

ஆக டச்சு இராணுவத்தின் தோல்விக்கு காரணமான, அனந்த பத்மநாபன் நாடார் இப்பகுதியில் ஒரு ஹீரோவானார். மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் அவருக்கு “குளச்சல் வீரன்” (குளச்சலின் வீரன்) என்ற பட்டம் வழங்கப்பட்டது. தனது ஆட்சியைக் காப்பாற்றிய அனந்த பத்மநாபன் நாடாருக்கு, மார்த்தாண்டவர்ம நாடார் ஏராளமான ஊர்களையும், விளை நிலங்களையும், ஏலாக்களையும் வழங்கியதற்கான செப்புப்பட்டயங்கள் பல உள்ளது.

குளச்சல் போரில் வெற்றி பெற்றதற்காக அவரை பாராட்டி அவர் பெயரில் பல நினைவிடங்களை அமைத்த மன்னர் மார்த்தாண்ட வர்மன், பல ஊர்களுக்கு அனந்த பத்மநாபனின் பெயரைச் சூட்டியதோடு குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையின் பெயரை இவரை கவுரவிக்கும் விதமாக சூட்டினார். பிற்காலத்தில் அவரின் வெற்றியை பறைசாற்றும் வரலாற்று சுவடுகள் அயல் இனத்தவர்களால் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டது.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

ஏப்ரல் 16,2013 அன்று நாளேடுகளில் வெளியிட்ட அறிக்கையில் அனந்த பத்மநாப நாடாருக்கு தச்சன்விளையில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy: H.Raja

Tags :அனந்த பத்மநாபன் நாடார்எடிட்டர்ஸ் தேர்வுகுளச்சல் வீரன்திருவிதாங்கூர் சமஸ்தானம்பத்மநாபபுரம் அரண்மனைமன்னர் மார்த்தாண்ட வர்மா